சின்னமனூர் நகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களை தன்வசபடுத்துவதில் திமுகவினரிடையே மோதல் ஏற்ப்பட்டது.
தேனிமாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 26 வார்டுகளில் நடைபெற்ற வாக்குப்பதிவின் வாக்குகள் எண்ணும் பணி சின்னமனூர் காயத்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முதல் சுற்றில் 1 முதல் 7 வரையிலான வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது இதில் 7 வார்டுகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற்றது. அதன்படி திமுக 5 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தயார் நிலையில் இருந்த திமுகவை சேர்ந்த இரு பிரிவினர், நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் திமுகவினரை தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள், தலைவர் பதவிக்காக மற்றவர்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் இரண்டு பிரிவாக நின்று மோதிக்கொண்ட சம்பவம் சின்னமனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.