உக்ரைன் நாடு மீது ரஷியா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் போர் நடத்தி வருகிறது. இப்போரில் இரு நாட்டு வீரர்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் மற்றும் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
போரை நிறுத்த ஐ.நா. அமைப்பு, போப் பிரான்சிஸ், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்தும், மேலும் பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தும் வருகின்றன.
இந்த போரால் மனித இனத்தில் 5-ல் ஒரு பங்கு சதவீதத்தினருக்கும் கூடுதலானோர் வறுமை, பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த போரால், தானிய ஏற்றுமதி தடைப்பட்டும், வினியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டும், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தும் உள்ளது. கச்சா எண்ணெய் விலையும் 60%-க்கும் கூடுதலாக உயர்வடைந்தும், எரிவாயு மற்றும் உரம் ஆகியவை இருமடங்கிற்கும் கூடுதலாக விலையேற்றம் அடைந்து உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.