நிவர் புயலின் போது சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படை வீரர்களை சென்னை வடக்கு மண்டல இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டினார்.
நிவர் புயலின்போது சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உரிய மீட்பு மற்றும் உதவிகள் செய்ய சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து, காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், ஊர்க்காவல் படை வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தியும் அவ்வப்பொழுது உரிய தகவலின்பேரில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றும் அவசர அழைப்பின் பேரிலும் பல உதவிகள் செய்தனர். மீட்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுடன், ஊர்க்காவல் படை வீரர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து, மீட்பு மற்றும் பொது சேவைக்கு உதவினர். இதனால் பெருமழையில் அவதிப்பட்ட பொதுமக்கள் காவல்துறையின் உதவிகளுக்கு நன்றிகள் கூறியதுடன், சமூக வலைதளங்களிலும் பாராட்டி வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள், இணைக்கமிஷனர்கள் துணைக்கமிஷனர்கள் புயல் மற்றும் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்களை பாராட்டி வருகின்றனர். நேற்று சென்னை, மாதவரம், பூக்கடை மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டங்களில் நிவர் புயல் மீட்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றிய ஊர்க்காவல் படையினரை, வடக்கு மண்டல இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் ராயபுரம் காவல் சரகத்தில் உள்ள மண்டபத்தில் நேரில் சந்தித்து அவர்களது சேவைகளை பாராட்டி வாழ்த்தினார். புயல் மற்றும் பெருமழையின்போது பொதுமக்களுக்கு உதவி செய்ய அடை மழையை பொருட்படுத்தாமல் காவல்துறையினருடன் இணைந்து உதவிக்கரமாக செயல்பட்டமைக்காக 100 ஊர்க்காவல் படையினரை வெகுவாக பாலகிருஷ்ணன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி மற்றும் உதவிக்கமிஷனர்கள் மற்றும் ஊர்க்காவல் படை வடக்கு மண்டல ஏரியா கமாண்டர் சஞ்சய்பன்சாலி மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.