தமிழகத்தை நோக்கி புரெவி புயல் நகர்ந்து வரும் சூழலில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது பாம்பன் பகுதியில் இருந்து 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு புரெவி புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
இந்த நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி உள்ளார். இத்தகவலை, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
அந்த பதிவில், புரெவி புயல் தொடர்பாக, தமிழக முதல்வருடன் தொலைபேசி மூலம் உரையாடினேன். மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் நிலைமைகள் குறித்து விவாதித்தோம். மத்திய அரசு தமிழகத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிப்பவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.