ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த பாஜகவை பின்னுக்கு தள்ளி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அதிக இடங்களை பெற்றுள்ளது. இதன் மூலம், மாநகராட்சியை கைப்பற்றிவிடலாம் என்று திட்டமிட்ட பாஜகவின் எண்ணம் பலிக்கவில்லை.
ஐதராபாத் மாநகராட்சியில், மொத்தம் 150 வார்டுகளுக்கும் டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தல், ஒட்டுமொத்த இந்திய அளவில் அதிக கவனத்தை பெற்றது. காரணம், கர்நாடகாவை தொடர்ந்து தென் இந்தியாவில் வேரூன்ற இதை வாய்ப்பாக பாஜக கருதியது. அதே நேரம், செல்வாக்கு சரிந்து வரும் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவுக்கு, தனது பலத்தை எடை போட ஒரு வாய்ப்பாக கருதினார்.
அண்மையில் தெலங்கானா மாநிலம் துபாக் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக வெற்றி பெற்றது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிஆர்எஸ் வசமிருந்த நான்கு முக்கிய தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. எனவே, பாஜக வரக்கூடாது என்று அவரும் தீவிரமாக செயல்பட்டார்.
இதன் காரணமாக பாஜக சார்பில் அமித் ஷா, நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர், மாநகராட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.
இதற்கிடையே நடந்த வாக்குப்பதிவில், 46.6% வாக்குகள் மட்டுமே பதிவாகின. பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணும் பணி தொடங்கியது; முதலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. காலை 11 நிலவரப்படி பாஜக 88 வார்டுகளிலும், டிஆர்எஸ் 32 வார்டுகளிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி 13 வார்டுகளிலும் முன்னிலை பெற்றிருந்தது.
ஆனால், மாலையில் நிலவரம் தலைகீழானது. டிஆர்எஸ் 57 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 31 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாகக் கூறப்பட்டது. கடைசியாக கிடைத்த தகவலின்படி, டிஆர்எஸ் 55 வார்டுகளிலும், பாஜக 48 வார்டுகளிலும், ஏஐஎம்ஐஎம் 43 வார்டுகளிலும் காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.
ஐதராபாத் மாநகராட்சியை எப்படியும் கைப்பற்றியாக வேண்டும் என்ற சூளுரையுடன், அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களே நேரடியாக வந்து பிரசாரம் செய்தனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது பாஜக அதிக இடங்களை கைப்பற்றினாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது, அக்கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.