ஆன்லைனில் ரூ. 64 ஆயிரம் மோசடி: பலே ஆசாமிகள் இருவர் கைது

ஆன்லைன் மூலம் ரூ. 64 ஆயிரம் அபகரித்த இருவரை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் 4 டெபிட்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, செம்பரப்பாக்கம், லேக்வியூ அப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 56). இவர் எஸ்.பி.ஐ வங்கியின் கிரடிட் கார்டு வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த மாதம் 18ம் தேதியன்று சந்திரசேகரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார். அந்த நபர் சந்திரசேகரின் எஸ்பிஐ கிரடிட் கார்டு பிரிவில்  பணிபுரிவதாக கூறியுள்ளார். மேலும் சந்திரசேகரின் கிரெடிட் கார்டில் கடன்தொகையையும், ரிவார்டு பாயிண்டையும் அதிகரித்து தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதனை நம்பிய சந்திரசேகர் தனது கிரடிட் கார்டு விபரங்களையும், அதனையடுத்து வந்த ஓடிபி எண்ணையும் பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் சந்திரசேகரின் கிரடிட் கார்டிலிருந்து ரூ. 64 ஆயிரம்- எடுக்கப்பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அம்பத்துார் மாவட்ட சைபர்கிரைம் பிரிவில் புகார் அளித்தார். துணைக்கமிஷனர் டாக்டர் தீபா சத்யன் மேற்பார்வையில் அம்பத்துார் காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார்  நசரத்பேட்டை போலீசாருடன் இணைந்து புலனாய்வு மேற்கொண்டனர். இதில் சந்திரசேகரின் கிரடிட் கார்டிலிருந்து ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்துள்ளது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து சைபர்கிரைம் போலீசார் அதுதொடர்பாக எஸ்பிஐ வங்கிக்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு சந்திரசேகர் இழந்த தொகையை அவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும்படி பரிந்துரைத்தனர். அதற்கு எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகத்தினர் மொபிக்விக் ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலி மூலம் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் வங்கி நிர்வாகம் பணத்தை திரும்பப் பெற இயலாது எனவும் தெரிவித்தனர்.

அதனால் சைபர்கிரைம் போலீசார் உடனே பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட மொபிக்விக் செயலில் வங்கிக் கணக்கு விபரங்களை கடிதம் மூலம் கேட்டுப்பெற்றனர். வங்கிக்கணக்கு விபரங்களை சரிபார்த்த போது, சந்திரசேகர் கிரிடிட் கார்டிலிருந்து பணம் நொய்டாவில் உள்ள ஒரு நபருக்கும், சென்னையில் உள்ள ஒருவரின் வங்கி கணக்கிற்கும் சென்றுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் இந்த மோசடியில் ஈடுபட்ட சென்னை கோவளத்தைச் சேர்ந்த ராயிஸ்டர் டிசில்வா (வயது 25), வளசரவாக்கத்தைச் சேர்ந்த திருவனந்தன் (வயது 42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.30 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் 4 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சைபர்கிரைம் போலீசார் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ராயிஸ்டர் டி சில்வா மற்றும் திருவனந்தன் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலுக்காக சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!