காவல் ஆளிநர்களின் வாரிசுகள் 81 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு இயக்குநரகம் மூலம் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததற்கான பணி நியமன ஆணையை கமிஷனர் நேற்று வழங்கினார்.
சென்னை நகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்களின் குடும்பத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் பணியின் போது இறந்த காவல் ஆளிநர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் வாரிசுகளின் கல்வி கட்டணங்கள் செலுத்த ஜிதோ என்ற தனியார் அமைப்பின் மூலம் கமிஷனர் மொத்தம் ரூ. 10 லட்சத்து 75 ஆயிரம் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காவலர் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அரசுப்பணியில் வேலை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை கமிஷனர் செய்துள்ளார்.
அதன்படி தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஒருங்கிணைந்து காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு வேலை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் 3ம் தேதி முதல் 11ம் தேதிவரை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்கல்வி மற்றும் இதர கல்வி தகுதிகளுடன் கூடிய வாரிசுகளுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினர் மூலம் இந்த நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்த முகாமில் காவல் ஆளிநர்களின் வாரிசுகளில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல், துணை மருத்துவம், பிஇ மற்றும் பிடெக் முடித்த வாரிசுகள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். அவர்கள் கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகளுடன் திகழ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் வாரிசுகளில் 81 நபர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 17 வேலை அளிக்கும் நிறுவனங்கள் 3 திறன் பயிற்சி பயிற்று விக்கும் நிறுவனங்கள் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்கு பெற்றனர். வேலைவாய்ப்பு வழங்க சம்மதித்த வென்சுரா செக்யூரிட்டி லிமிடெட், அடையார் ஆனந்த பவன், யுரேகா போர்பீஸ், ஆட்ஸ் பார் நீட்ஸ், வெல்த்ஹவுஸ் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. வேலைக்கு நியமிக்கப்பட்டவர்களின் பணி நியமன ஆணையை தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் மற்றும் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நேற்று வழங்கினர்.