தனியார் பார் ஊழியரை வழிப்பறிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் அரிவாளால் வெட்டி செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சேத்துப்பட்டு, எச் பிளாக்கைச் சேர்ந்தவர் ராபர்ட் ராஜ் (வயது 18). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வேலை முடித்து சேத்துப்பட்டு விஆர்ஆர் சாலை வழியாக தனது நண்பர் வசந்தகுமார் என்பவருடன் பெத்தானி மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் ராபர்ட் ராஜிடம் வந்து பேச்சுக் கொடுத்து பணம், செல்போனை தரும்படி மிரட்டியுள்ளனர். ராபர்ட்ராஜ் அங்கிருந்து செல்ல முயன்ற போது அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு அடி நீள கத்தியின் தலைப்பகுதியால் ராபர்ட்ராஜின் இடதுபுறம் தாக்கினர். பின்னர் அவரது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு அதில் இருந்த ஓப்போ செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். பின்பு அவர் தனது நண்பர் உதவியுடன் ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதியாகி சிகிச்சை பெற்றார். அவருக்கு தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராபர்ட் ராஜ் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வழிப்பறிக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.