சுரானா நிறுவனத்தின் 103 கிலோ தங்கம் மாயம்: சிபிஐயிடம் விசாரணை நடத்தும் சிபிசிஐடி

சிபிஐயின் கஸ்டடியில் இருந்த சுரானா நிறுவன லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் திருட்டு வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2012-ம் ஆண்டு சென்னையிலுள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அங்கு சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கக் கட்டிகள், நகைகள் என மொத்தம் 400.47 கிலோ
பறிமுதல் செய்யப்பட்டது. அவை எடை பரிசோதிக்கப்பட்டு சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் சிபிஐ முத்திரையுடன் மூடி சீல் வைக்கப்பட்டன.

அதன் லாக்கர்களின் சாவிகள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்வரி மாதம் இந்த  வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டுக்கு வந்தது. வங்கி அதிகாரிகள் முன்னிலையில் லாக்கர்களைத் திறந்து சிபிஐ சோதனையிட்டது. அப்போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகள்,  நகைகளை எடை பரிசோதனை செய்தபோது அதில் 103 கிலோ 864 கிராம் அளவுக்குத் தங்கம் மாயமாகியிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 103 கிலோ தங்கம் மாயமானது எப்படி என்பது குறித்து பெரும் கேள்விகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக சிபிசிஐடி போலீசார் இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்து எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தங்கம் காணாமல் போனது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சம்மன் கொடுக்கப்பட்டு விசாரணைக்கு அழைக்க உள்ள
நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 380 (களவாடுவது) என்ற பிரிவின் கீழ் நேற்று வழக்குப்பதிவு  செய்துள்ளனர். அது தொடர்பாக சுரானா நிறுவன நிர்வாகி ராமசுப்பிரமணியம் என்பவர் அளித்துள்ள புகாரின் பேரில் இந்த வழக்கை சிபிசிஐடி பதிவு செய்துள்ளது. வழக்கின் நகல் சிபிசிஐடி சிறப்பு கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!