தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது ரசிகர் மன்ற முன்னாள் செயலாளர் ரவி ராஜா காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜய் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய்யை நம்பியிருக்கும் என்னை காலி செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று ரவிராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு சொந்தமாக சென்னை, சாலிகிராமம், காவேரி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு விஜய்யின் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவி ராஜா, துணைச் செயலாளர் குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகருடன் இணைந்து அமைப்பின் செயல்பாடுகளுக்கு முரணாக நடந்ததாக பொறுப்பில் நீக்கப்பட்டனர்.
இதனால் விஜய்யின் வீட்டில் தங்கியிருந்த ரவிராஜா, ஏசி குமார் ஆகியோரை வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 பேரும் காலி செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து நடிகர் விஜய் விருகம்பாக்கம் போலீசில் அது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார். தனது வீட்டில் இருக்கும் இருவரும் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதாக விஜய் சார்பில் அவரத வழக்கறிஞர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்த புகார் மனுவை அளித்துள்ளனர்.
‘‘விஜய்யை நம்பியே உங்களை நம்பியே நாங்கள்’’ ரவிராஜா பேட்டி
—————————————————————————————————–
விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளராக இருந்து வந்த ரவிராஜா நேற்று சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘‘நானும், ஏசி குமாரும் கடந்த பல ஆண்டுகளாக விஜய் நற்பணி மன்றத்தில் உள்ளோம். விஜய்யின் வளர்ச்சிக்காக இரவும் பகலும் அரும்பாடு பட்டுள்ளோம். விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் விஜய்யின் திருமண அழைப்பிதழ் மற்றும் பைரவா வரை படம் ரிலீஸ் ஆகும் முன்பே படங்களுக்கு ஸ்டிக்கர், டிசைனிங் என அனைத்து பணிகளையும் மேற்கொண்டோம். கடந்த 23 ஆண்டுகளாக இந்த வீட்டில் நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். அந்த வீட்டுக்கு வாடகையும் கிடையாது. அட்வான்சும் கிடையாது. எனது குடும்பம், பிள்ளைகள் படிப்புச்செலவு என அனைத்து உதவிகளையும் விஜய் செய்து வந்தார். விஜய் மிகவும் நல்லவர். ஆனால் விஜய்யின் மேலாளர் புஸ்சி ஆனந்த் எங்களைப் பற்றி தவறான தகவல்களை விஜய்யிடம் தெரிவித்துள்ளார். விஜய்யின் தந்தை நடத்தி வரும் கட்சிக்கு நான் உறுதுணையாக நான் கன்னியாகுமரியில் மீட்டிங் நடத்தவிருப்பதாக பொய் தகவல்களை பரப்பியுள்ளார். அது சுத்தப்பொய். விஜய் திடீரென எங்களை வீட்டை விட்டு காலி செய்யச்சொல்வது அதிர்ச்சியாகவே உள்ளது. திடீரென காலி செய்யச் சொன்னால் நாங்கள் குடும்பத்துடன் எங்கே செல்வது. ஐந்து நிமிடம் விஜய் என்னை சந்திக்க வாய்ப்பு தந்தால் சில ஆதாரங்களுடன் அவருக்கு சில உண்மைகளை தெரிவிக்கவுள்ளேன்’’ என தெரிவித்தார்.
மேலும் ரவிராஜா சார்பில் விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உங்களைப் பிரிந்தால் எனக்கு வருமானம் இல்லை. சந்தோஷம் இல்லை. உங்களை நம்பிதான் நான். இது எனக்கு பெரிய இழப்பு என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.