டெல்லி,
கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில், அம்பானி உள்ளிட்ட 11 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதனை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார மாநாடு தொடங்கியதை முன்னிட்டு, ஆக்ஃபாம் என்ற நிறுவனம் சமநிலையற்ற சமூகத்தை உருவாக்கிய வைரஸ் என்ற தலைப்பில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ஷிவ் நாடார், சைரஸ் பூனாவல்லா, உதய் கோட்டக், அசிம் பிரேம்ஜி, சுனில் மிட்டல், ராதாகிருஷ்ண தாமணி, குமாரமங்கலம் பிர்லா, லட்சுமி மிட்டல் ஆகியோரின் சொத்து 2020ம் ஆண்டு மார்சிலிருந்து அதிகரித்துள்ளது. அதேசமயம், 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு மணிநேரத்துக்கு 1.70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
புள்ளிவிவரங்கள்படி, அம்பானி கொரோனா லாக்டவுன் காலத்தில் ஈட்டிய தொகை, அமைப்பு சாரா துறையில் உள்ள 40 கோடி பணியாளர்களை வறுமையில் தள்ளும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்தில், இந்தியாவிலுள்ள 10 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது, ரூ.12 லட்சத்து 97ஆயிரத்து 822 கோடி அதிகரித்துள்ளது. லாக்டவுன் காலகட்டத்தில் கோடீஸ்வரர்களிடம் அதிகரித்த ரூ.12.97 லட்சம் கோடி சொத்துக்களை 13.80 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.94 ஆயிரம் வழங்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.