சென்னை,
சட்டமன்றத் தேர்தலின்போது இணைய வழியில் நடக்கும் பணப்பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் 4.5 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும்.
அவர்கள் தபால் மூலமாகவும் வாக்கு அளிக்கலாம். பூத் வரை அவர்கள் தங்களின் வாகனத்தில் சென்று வாக்களிக்க முடியும். தற்போது தமிழகத்தில் தேர்தலுக்குத் தேவையான எலக்ட்ரானிக் ஓட்டு யந்திரங்கள் 90 சதவீதம் உள்ளன.
இன்னும் 5 நாட்களில் மீதமுள்ள யந்திரங்கள் வர உள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தின் செலவுகளை இந்திய தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. பிரச்சாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை அனுப்பப்படும். தேர்தலை முன்னிட்டு இணைய வழியாக நடைபெறும் பணப் பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் கண்காணிக்கும்.