மத்திய பிரதேசத்தில் கண்களை கட்டி கொண்டு வாசிக்கும், எழுதும் திறனுக்காக ஆசிய சாதனை புத்தகத்தில் 12 வயது மாணவி இடம் பிடித்துள்ளார்.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் வசித்து வரும் பள்ளி மாணவி தனிஷ்கா சுஜித் (வயது 13). தனது 11வது வயதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். பின்னர் 12வது வயதில் 12ம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார்.
இதுதவிர அவர் கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு கியூப் விளையாட்டில் வண்ணங்களை சீரான வரிசைக்கு கொண்டு வந்து அசத்துகிறார். இந்த சாதனை பற்றி கூறிய தனிஷ்கா, நான் கண்களை கட்டி கொண்டு வாசிக்கவும், எழுதவும் செய்வேன்.
இதற்காக ஆசிய சாதனைகள் புத்தகம் மற்றும் இந்திய சாதனைகள் புத்தகம் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளேன் என்று தெரிவித்து உள்ளார். இந்த சிறிய வயதில் பல திறமைகளை வளர்த்து கொண்டு, ஆசிய அளவில் சாதனைகளையும் படைத்துள்ள மாணவிக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.