பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வராது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இந்த முறை உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேரடியாக நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், நிதித்துறை இணை அமைச்சர், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்றார்.
மேலும் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிச்சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.