சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு, உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு, ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரில், ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு ஆகியவற்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்றுமதி சார்ந்த கண்காட்சியையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்காக, ஏற்றுமதி சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
மொத்தம் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில், 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதில், தொழில்துறை சார்பில் 14 ஒப்பந்தங்களும், ஊரக தொழில்துறை சார்பில் 10 ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், 41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.