கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பாஜக வேட்பாளர் கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு பெற்று தோல்வியை தழிவியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுகவே முன்னிலை பெற்று வருகிறது.
இந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.
இந்நிலையில், கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றிருந்தார். இதனையடுத்து, அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் வெறும் 1 வாக்கை மட்டும் பெற்று தோல்வியை தழுவினார். இவர், பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவரது குடும்பத்தில் இவரோடு சேர்த்து மொத்தம் 6 பேர் உள்ளனர். அவர்களே கார்த்திக்கிற்கு ஓட்டு போடவில்லை என்பதை அறிந்த கார்த்திக் அதிர்ச்சியில் உறைந்தார். இதனை தொடர்ந்து ஒத்து ஓட்டு பாஜக என்ற ஹேஷ்டாக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.