கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிந்ததும் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் பதறினார்கள்.
ஆனால் தேர்தலுக்கு முன்பே நீண்ட நாட்களாக எடப்பாடிக்கு குடலிறக்க பிரச்சினை இருந்து வந்ததாகவும், பிரச்சாரங்கள் முடிந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவிருந்ததாகவும் அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட பிறகே தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வீடு திரும்பினார்.
சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் அவர் வழக்கம்போல தனது பணிகளை தொடங்கினார். எனினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இச்சூழலில் இன்று எடப்பாடி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். உடலுறுப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறியும் எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இந்தச் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.