அதிமுக அரசு கூறியதால்தான் மருத்துவமனையில் இருந்து சிசிடிவியை அகற்றினோம் என்று உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில், ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி பலரிடமும் இந்த விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிடுகையில்;- ஜெயலலிதாவுக்கு பிரைவஸி தேவை என்று அதிமுக அரசு கூறியதால்தான் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றினோம். மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இல்லை. எந்த அடிப்படையில் மருத்துவ விவரங்களை நாங்கள் தெரிவிப்பது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தால் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என அரியமா சுந்தரம் வாதிட்டார். மேலும், ஆறுமுகசாமி ஆணையம் முன் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்த அப்போலோ, இந்த ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் டாக்டர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளது.