3 விவசாய சட்டங்களின் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் தொலைக்காட்சிகள் மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர், நமது விவசாயிகளின் வேதனைகளை நேரடியாகவே அறிகிறேன். அதனால்தான் விவசாயிகளுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபட்டு வருகிறோம்.விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகின்றேன்.
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க 2014ம் ஆண்டிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரித்திருக்கிறோம். 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்ட ஒன்று. வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்திருக்கிறோம்.
விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் 5 மடங்கு அதிகரித்திருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது. டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடமாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் 3 விவசாய சட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் திட்டங்களை ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.