தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் இன்று கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கடந்தது என்றும், முழு பகுதியும் அதிகாலை 5.30 மணிக்குள் கரையை கடந்துவிட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 23-ந் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்ளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!