சென்னை வேப்பேரியில் மழை தண்ணீரில் வழுக்கி விழுந்து மின்சாரம் தாக்கி தலைமைச் செயலக ஊழியர் உயிரிழந்தார். சென்னை வேப்பேரி சாலை தெருவில் வசித்து வருபவர் முரளி கிருஷ்ணன் . தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். முரளி கிருஷ்ணனின் ஓட்டு வீட்டின் முன்பகுதியில் மழை தண்ணீர் தேங்கி இருக்கிறது. இன்று காலை அவர் வெளியே கடைக்கு செல்வதற்காக வந்தார். அவர் மழை தண்ணீரில் நடந்து சென்ற போது வழுக்கி விழுந்த நிலையில் அருகில் இருந்த வீட்டின் இரும்பு கதவை பிடித்தார். அப்போது கதவை ஒட்டி சென்ற மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே முரளி கிருஷ்ணன் இறந்து போனார். அக்கம்பக்கத்தினர் உடனே வேப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பெரியமேடு மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்இணைப்பை துண்டித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மழை காரணமாக 5 நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குப்பைகள் தேங்கி இருப்பதால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.