நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் ஜனநாயகம் பறிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி ராஜ்யசபா எம்.பிகள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை திரும்ப பெற எதிர்கட்சிகள் தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்ட போதும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதையடுத்து 12 பேரின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி காங்கிரஸ் எம்.பி ராகுல் தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி பேரணியாக சென்றனர். கையில் பதாகைகளை ஏந்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் பேரணியாக சென்றதால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் ஜனநாயகம் பறிக்கப்படுவதாகவும், எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுவதாகவும் சாடினார். மேலும் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு விவாதத்துக்கு அனுமதிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.