தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மேயர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. அந்த மாநகராட்சிகளுக்கு மேயருக்கான மறைமுக தேர்தல்கள் இன்று நடைபெற்றன. சென்னையில் திமுக சார்பில் பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரியா ராஜன் சென்னை மாநகராட்சியின் 49 ஆவது மேயராக பதவியேற்றுக் கொண்டார். இதே போல் மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி, தூத்துக்குடி மாநகராட்சி மேயராக என்.பி.ஜெகன், கோவை மாநகராட்சி மேயராக திமுகவின் கல்பனா, திண்டுக்கல் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த இளமதி உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.