ஜி- 20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை அடுத்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்து வருகின்றன. மேலும் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் இருந்தும் ரஷ்யாவை இடைநீக்கம் செய்துள்ளன. தற்போது ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்தும் ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்த கூட்டமைப்பில் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினராக இருப்பதால் ரஷ்யாவை வெளியேற்றுவது எளிதான காரியமல்ல. அத்துடன் அது நடக்கவே நடக்காது என்று சீனா உறுதிபடத் தெரிவித்து விட்டது. இந்நிலையில்தான் ஜி 20 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று பைடன் மீண்டும் கூறியிருக்கிறார்.