வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.