சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தில் விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. வடமாவட்டங்களின் கட்சிஎன ஒரு சிலரால் கருத்து தெரிவிக்கப்பட்டாலும், தமிழகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருவதற்கு காரணம் தமிழ்நாட்டில் எங்கே எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் குரல் கொடுப்பது பாமக தான்.
தென் மாவட்டம் ஒரு வளர்ச்சி இல்லாத பகுதியாக தொழில் வளம், வேலைவாய்ப்பு இல்லாத நிலையில்தான் தென் மாவட்டங்களில் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள், கலவரங்கள் ஏற்படுகின்றன.
தமிழகத்தில் 60% தொழில்வளம் சென்னை மற்றும் அதனை சார்ந்துள்ளது. 15% கோவை, ஓசூர், திருச்சி, கடலூர் போன்ற பகுதிகளிலும், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலும் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது.
எனவே தென் மாவட்டங்களில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வர தொடர்ந்து குரல் கொடுப்போம். காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றினால் காவிரி ஆற்றிலிருந்து ஆண்டுதோறும் 150 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து 7 மாவட்டங்கள் பயன்பெறும்.
தமிழகத்தில் அமையும் எந்த ஒரு தொழிற்சாலைகளிலும் 80% விழுக்காடு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். வட மாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப் படுவதை தமிழக முதல்வர் கண்காணித்து 75% உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிஆன படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கொள்கையையும், மதுவிலக்குக் கொள்கை ஆகியனவற்றை நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்ட உத்தரவின்படி மதுபான பார்களை மூட நடவடிக்கை எடுக்காத நிலையை மாற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டினால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 60 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி தொழில் தமிழக அளவிலான பிரச்சனையாகும். தீப்பெட்டி தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர் களை தடை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பாணை பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதே தெரியாத நிலையில், பட்டாசு தொழிலுக்கான பாதுகாப்பு ஆய்வுகள் குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் அழுத்தம் தந்து பட்டாசு தொழிலில் கொள்கை திருத்தம் கொண்டு வர வேண்டும். இதன் மூலமாக உச்ச நீதிமன்றத்திலிருந்து பட்டாசு தொழிலுக்கு ண்டான வழக்கை தள்ளுபடி செய்ய குரல் கொடுக்க வேண்டும்.
பண மதிப்பீடு இழப்பு, ஜிஎஸ்டி வரி, கொரானா காலகட்டம் என மூன்று கட்ட பிரச்சனைகளை சந்தித்து பொருளாதாரப் பிரச்சனை, தொழில் நலிவு ஆகியனவற்றை அனைவரும் எதிர்கொண்டுள்ள நிலையில் சொத்து வரி, பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு, உரம், கல்விக்கடன் போன்ற எந்த ஒரு விலைவாசியும் உயராமல் மக்களின் மன நிலைமையை புரிந்து மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வழக்கில் கைதான குற்றவாளிகள் விடுதலை செய்யப் படுவதால் பயமின்றி உள்ள நிலைமை மாறி கடுமையான தண்டனையான தூக்குத் தண்டனை குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படவேண்டும். இதில் யார் தவறு செய்தாலும் எந்தக் கட்சியாக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வன்னியர்களுக்கு உண்டான 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஒரு ஜாதி பிரச்சனை அல்ல. இது ஒரு சமூக நீதி பிரச்சனையாகும். இது யாருக்கும் எதிரான இட ஒதுக்கீடு இல்லை. அனைவருக்கும் சமமான சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.