தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டு பகுதியில் வைகை ஆற்றின் நடுவில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்ட காரணத்தால் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்ட நிலையிலுள்ளது. மேலும், கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்படி இருக்கும் தடுப்பணை பகுதியில் வைகை ஆற்றின் தண்ணீர் தேங்கி வழிந்தோடுகிறது.
இந்த தண்ணீரில் அதே பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அபாயகரமான முறையில் குளித்து வருகின்றனர். பள்ளி கல்லூரிகள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகள் முடிவடையாமல் கான்கிரீட் கம்பிகள் ஆங்காங்கே நீட்டி கொண்டிருக்கும் தடுப்பணை பகுதியில் ஆபத்தறியாமல் சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.
ஆபத்தான தடுப்பணையில் விபரீதம் ஏதும் நடைபெறுவதற்கு முன்பாக, அந்த பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.