சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தொடர்புகொள்வதற்காக வாக்கி – டாக்கி சேவை பயன்படுத்தப்படுகிறது. டி.எம்.ஆர்., எனும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ வசதி சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.
இந்த புதிய தொழில் நுட்ப சேவை‘டெட்ரா’ தொழில்நுட்பம் என்ற ஐரோப்பா தொழில் நுட்பத்தில் முழுவதும் டிஜிட்டல் வடிவில் இந்த தொலைத் தொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான முனையம் மற்றும் விமான ஓடுபாதைகளிலும் தடையில்லா சேவை கிடைப்பதற்காக இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் விமான நிறுவனங்கள்,தொழில் நுட்ப வல்லுநா்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என அனைவருக்கும், இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த நிறுவனங்கள் தனித் தனியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. சென்னை விமான “டிரங்கிடு ரேடியோ சேவை”மூலம் இணைப்புகள் வழங்கப்படும்.
இந்த கருவிகள் மூலம் நடக்கும் சேவைகளை வெளிநபர்கள் யாரும் இந்த அலைவரிசையை ஒட்டு கேட்க முடியாது. மேலும் பேசும் தகவல்களை அந்தந்த அதிகாரிகள், ஊழியா்கள் பதிவு செய்து கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள், வருகை, புறப்பாடுகள் மேம்படும் என்று கூறப்படுகிறது.