கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இன்று இரவு 7 மணி வரை நடக்கிறது. தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியே போடாதவர்கள் சுமார் 48 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒரு கோடியே 50 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி போடவில்லை.
ஏற்கனவே கொரோனா பரவல் மீண்டும் தொடங்கி இருப்பதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி முதல் தவணை ஊசி போட வேண்டியவர்கள், 2வது தவணை ஊசி போட வேண்டியவர்கள் பெயர் பட்டியல் கிராமம் வாரியாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலின்படி களப்பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வீடு வீடாக சென்று ஊசி போட வரும்படி ‘சிலிப்’ விநியோகித்தனர். அதில் முகாம் நடைபெறும் இடம் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அம்மாபேட்டை, வாழப்பாடி, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டார். தொடர்ந்து விழுப்புரம், உளுந்தூர்பேட்டை பகுதியில் பல முகாம்களை ஆய்வு செய்கிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மக்களை தேடிச் செல்லும் இந்த அரசு மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த மாபெரும் முகாமை நடத்துகிறது.
மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தினர், மக்களை தேடி மருத்துவம் குழுவினர் மற்றும் தெற்கு ரெயில்வே சார்ந்த அதிகாரிகள், ஊழியர்களை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் தடுப்பூசி போட தகுதியானவர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 3 ஆயிரத்து 300 முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு, வார்டுக்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்களும், மீதமுள்ள 1,400 குழுக்கள், 3,100 இடங்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார். இன்று நடைபெறும் முகாம்களில் தமிழகம் முழுவதும் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த இலக்கை தாண்டுவோம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.