திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் ரத்து !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கூறியதாவது:

ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருவதால் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழை பெண்களின் திருமணத்திற்கு கல்யாண மஸ்து திட்டத்தின் கீழ் 5 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டம் மீண்டும் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் பக்தர்களுக்கு விரைவில் கிடைக்க செய்யப்படும். தேவஸ்தான இணையதளத்திலும் கிடைக்கும். மகாராஷ்டிரா நவி மும்பையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக ரூ.70 கோடி செலவில் கோவில் கட்ட நன்கொடையாளர் ஒருவர் முன் வந்துள்ளார். விரைவில் கட்டுமான பணி தொடங்கப்படும். புவனேஸ்வரில் புதியதாக கட்டப்பட்ட கோவிலுக்கு இந்த மாதம் 26ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜம்மு சீதன்பேட்டை, அமராவதி ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Translate »
error: Content is protected !!