அரசுப் பேருந்து ஓட்டுனரை தாக்கிய போதை ஆசாமி

அரசுப் பேருந்து ஓட்டுனரை போதை ஆசாமி ஒருவர் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ECR சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்வதற்காக A.மணக்குடி பகுதியில் சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அந்த பேருந்தை ஓட்டுநர் ஜான் போஸ்கோ என்பவர் ஓட்டி வந்துள்ளார். அந்தப் பேருந்து A.மணக்குடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் திடீரென சாலையின் குறுக்கே தள்ளாடியபடி நின்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு மது போதையில் சாலையின் குறுக்கே நின்றவரை ஓரமாக செல்லும்படி எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதுபோதையில் இருந்த மர்ம நபர் அரசு பேருந்து ஓட்டுனரை அடித்து தாக்கி விட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி விட்டு தன்னைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலைக்குடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அரசுப்பேருந்து ஓட்டுனரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரைத் தாக்கிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அரசுப்பேருந்து ஓட்டுநர் சாலை மறியலை கைவிட்டு பேருந்தை இயக்கிச் சென்றார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு திருப்பாலைக்குடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பியோடி தலைமறைவான போதை ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!