ஓய்வூதியர்களுக்கு சேவை வழங்கும் திட்டம் – பி .டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

 

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள்  சான்றிதழைப் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு (IPPB) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நிதி மற்றும் மனித வளமேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தானது.

மாநில அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் சுமார் 7,15,761 ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடாந்திர நேர்காணலிற்காக (Mustering)சமர்ப்பிக்கின்றனர். தற்போது, ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது விருப்பங்களின் அடிப்படையில் பின்வரும் முறைகளில் ஒன்றின் மூலம் வருடாந்திர நேர்காணல் (Mustering) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(i) ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகசென்று பதிவு செய்தல் (ii) தபால் மூலம் வாழ்நாள்  சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் (iii) மின்னணு விரல்ரேகை சாதனத்தைப் பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையம் மூலம் மின்னணு வாழ்நாள்  சான்றிதழ் (DLC) சமப்பித்தல்.

மேலும், கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வருடாந்திர நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரையிலான மாதங்களில் நடைபெறும் வருடாந்திர நேர்காணலில் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களின் வயதினை கருத்தில் கொண்டும் அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான  சேவையை உள்ளடக்கிய ஐந்து முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது (IPPB) ஒரு மின்னணு வாழ்நாள்   சான்றிதழுக்கு ரூ.70/- என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு இச்சேவையை வழங்குவதற்காக, சென்னை, தலைமைச் செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் (IPPB) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

இதில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை ஆணையர்                       வெங்கடேஷ்,கருவூலம் மற்றும் கணக்குத்துறை, திரு. குருசரண் ராய் பன்சால், தலைமை பொது மேலாளர், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம், புதுதில்லி மற்றும்            நிதித்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!