கத்தி முனையில் 1.50 லட்சம் பணம் மற்றும் 5 செல்போன்களை பறித்தவர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி தொல்காப்பியம் தெருவை சேர்ந்தவர் ரஹிம்(30). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ மெயின் ரோட்டில் ஆறு மாதமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இருசக்கர வாகனத்தில் பர்மா பஜாருக்கு சென்ற ரஹீம் தனது பணியை முடித்துவிட்டு இரவு 10.30 மணியளவில் 1.5 லட்சம் பணம் மற்றும் 5 செல்போன்களுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலை மஹிந்திரா ஷோரூம் அருகே வரும் போது திடீரென பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றதால் ரஹீம் தள்ளி சென்றார்.
அந்த நேரத்தில் இரு இருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் ரஹீமை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி கையில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் பையை பறித்துவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக ரஹீம் சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.