ரூ. 60 லட்ச சொத்தை அரசுக்கு எழுதிக்கொடுத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த மலைவாழ் மக்களுக்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது சொந்த இடத்தை எழுதிக்கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மலைவாழ் மக்கள் (இருளர் பழங்குடியினர்) நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 26.2.21 அன்று தீவனூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.

இந்த மனு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அரசு புறம்போக்கு இடம் ஏதும் இல்லாததால் அரசு அதிகாரிகள் மாற்று இடம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக செஞ்சி சட்டமன்ற உறுப்பினரும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் தனது சொந்த நிலத்தை கொடுக்க முன் வந்தார்.

அதன் அடிப்படையில் செஞ்சி பேரூராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சர்வே எண். 51/1.எ. 66 சென்ட் புஞ்செய் நிலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன்னுடைய மனைவி சைதானீ பீ மற்றும் மூத்த மகளுடன் வந்து செஞ்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழக ஆளுநர் பெயருக்கு இலவசமாக எழுதி கொடுத்தார். மலைவாழ் மக்களுக்காக அமைச்சர் எழுதிக்கொடுத்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் எனக் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!