உட்கட்சி தேர்தல் குறித்து தேமுதிக தலைமை கழகம் ஆலோசனை

 

உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வருகிற 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தேமுதிக பொருளாளர் திருமதி, பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை கழகம் விடுத்துள்ள அறிவிப்பில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் உட்கட்சி தேர்தல் குறித்தும், ஆகஸ்ட் 25 வறுமை ஒழிப்பு தின விழா, 18 ஆம் ஆண்டு கட்சி துவக்க நாள் விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டம் வாரியாக ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 14,15,16 ஆகிய தேதிகளில்  காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 14ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை – ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளார்.

வருகிற 15ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

வருகிற 16 ஆம் தேதி மதுரை, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தேமுதிக தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!