தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் மீண்டும் நியமனம்

 

தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதற்கு அடிப்படையாக இருந்த தகுதி பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி, கடந்த 2019 மே 31ம் தேதி பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து காலியான அந்த பதவிக்கு பூர்ண சந்திரனை நியமித்து, கடந்த அதிமுக அரசு உத்தரவிட்டது. பூர்ணசந்திரனை விட சீனியரான தன்னை கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்க கோரியும், இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2020 ஆண்டு, பணி மூப்பில் உள்ள கீதாவை விடுத்து பூர்ணசந்திரனை கல்லூரி கல்வி இயக்குனராக நியமித்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி தமிழக அரசின் அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பூர்ணசந்திரன் பெயரை உள்ளடக்கிய தகுதி பட்டியலின் அடிப்படையில்   மீண்டும் அவரை கல்லூரி கல்வி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டதாக டாக்டர் கீதா சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த தகுதி பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது ஷபிக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,  பூர்ணசந்திரனின் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்ட பிறகும், தகுதி பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு மீண்டும் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டதாகவும்,எனவே அந்த தகுதி பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜி. சங்கரன் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இன்று வழங்கிய தீர்ப்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவிக்கான பூர்ணசந்திரன் பெயரை உள்ளடக்கிய தகுதி பட்டியலை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளனர்.இதனால் அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!