சென்னை பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

 

சென்னை பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் டிராபிக் ராமசாமி 2016ஆம் ஆண்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில்  இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி  என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாற்றிடம் வழங்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தர்ப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் அவகாசம் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜூன் 23ஆம் தேதிக்குள் மாற்றிடம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும்போது பணியில் இருந்த தலைமை செயலாளர் ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் காபூர், சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் அதே பொறுப்பில் தற்போது இருப்பவர்களும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜுன் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!