18 மாவட்டங்களில் நாளை கன மழை எச்சரிக்கை

சென்னை மேற்கு திசை காற்றின் காரணமாக, 18 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும். சென்னையில் நாளை அதிகபட்சம், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. சிவகங்கை, வேலுார், திண்டுக்கல், விருதுநகர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
லட்சத்தீவு, குமரிக்கடல், கேரளா, கர்நாடகா கடல் பகுதிகளில், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, வரும் 17ம் தேதி வரை, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, வேலுார் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

 

 

 

 

Translate »
error: Content is protected !!