அக்னிபாத்: அரசு செலவில் ஆர்எஸ்எஸ்-ஐ பயிற்றுவிக்கும் திட்டம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு

 

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு அரசு செலவில் மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிடப்பட்ட பயிற்சித் திட்டமாகும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின்  தேசிய தலைவர் எம்.கே.பைஸி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அரசின் இந்த முடிவு நாட்டின் பல பகுதிகளில் வலுவான மற்றும் வன்முறை எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் இந்த திட்டத்திற்கு எதிராக, முன்னாள் ராணுவ அதிகாரிகள் உட்பட அனைத்து விவேகமான நபர்களும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.  இத்திட்டத்தில் சேர்க்கப்படுவோருக்கு 6 மாத இராணுவப் பயிற்சி அளித்து 4 வருட முடிவில் அவர்களில் 75% பேரை பென்ஷன் மற்றும் பணிநிறைவுப் பலன்கள் எதுவுமில்லாமல் பணிநீக்கம் செய்யும் திட்டத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் இத்திட்டத்தை மிக அற்புதமானதாக, கவர்ச்சிகரமானதாக முன்வைத்தாலும், இந்தத் திட்டத்தை விளக்குவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு “நாட்டிற்கு வருங்காலத்தில் நிகழவிருக்கும் ஒரு  பேரழிவை கருத்தாக்கம் செய்யும் நிகழ்வாகத் தோன்றுகிறது” என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.  ஏனெனில் அத்திட்டம் ஒரு முக்கியமான தனிநபரின், தலைவரின் கனவுத் திட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படும் அக்னி வீரர்களின் எண்ணிக்கை 40,000-50,000 ஆகும். அரசின் முடிவின் படி 4 வருடங்களின் முடிவில், இந்த இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக ஓய்வூதிய பலன்கள் ஏதுமின்றி வீதிகளில் விடுவிக்கப்படுவார்கள்.  இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் கழித்து ஓய்வு பெறுபவர்களுக்கு அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பில் உதவ அரசாங்கம் முன்வரும் என்று கூறப்பட்டாலும், ஏற்கனவே 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கே அரசு இதுவரை உதவாததால், அரசின் இந்த சலுகை அறிப்பும் கானல் நீராகவே இருக்கும்.  ஏற்கனவே ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஒன்றியத்தின் அனைத்து அமைச்சகங்களும், மாநில அரசுகளும் இதுவரை நிறைவேற்றவில்லை. மத்திய ஆயுதக் காவல்படை (CAPF) மற்றும் மாநிலங்களின் ஆயுதப் படைகள் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை மறுபணி அமர்த்த சரியான இலக்குகளாக இருந்தும் அவ்வாறு செய்ய உள்துறை முன்வரவில்லை. இதன்மூலம்  ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடைகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியானது ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பெற உதவுமே அன்றி, அந்த சான்றிதழுக்கு உள்நாட்டு வேலைகளில் எவ்வித மதிப்பும் இல்லை.

இராணுவம் ஒரு பெரிய தொழில்நுட்ப குழுவை உருவாக்குகிறது.  அவர்களுக்கு ஆறு மாதங்களில் பயிற்சி அளிக்க முடியாது;  பெரும்பாலான தொழில்நுட்ப அறிவு வேலையில் பயிற்சி மூலம் பெறப்படுகிறது.  ஆறு மாத பயிற்சி பெற்ற பணியாளர்கள், வேலையை விட்டு வெளியேறி மற்ற வேலைகளைத் தேடுவதற்கு முன், அவர்களின் தகுதிகளையும், பணித் திறமைகளையும் புறக்கணிக்கிறார்கள்.  இந்தத் திட்டம் இராணுவத்தின் தரத்தை குறைக்கும்.  மேலும், பாசிஸ்டுகள் தங்கள் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலை திறம்பட செயல்படுத்த தெருக்களில் உடனடியாகக் கிடைக்கும் இராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் கொண்ட குழுவைத் தயார்படுத்தும் என்றும் ஃபைஸி குற்றம்சாட்டினார்.

ஆகவே, ராணுவத்தின் தரத்தைக் குறைக்கும் இந்தத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், ராணுவத்தில் வழக்கமான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் ஃபைஸி ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.

 

Translate »
error: Content is protected !!