பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு

 

பழனி அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்தநிலையில் தற்போது போலீசார் அவர்களை கைது செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது புஷ்பதூர் ஊராட்சி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவியாக செல்வராணி என்பவர் இருந்து வருகிறார். சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி மன்றத்தலைவராக வெற்றிபெற்ற செல்வராணியை செயல்பட விடாமல் தடுப்பதாக புகார் எழுந்தது.மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சிமன்ற தலைவருக்கான காசோலை அங்கீகாரத்தை ரத்து செய்து மாவட்ட‌நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை‌ அமைச்சர் சக்கரபாணியின் தூண்டுதலே காரணம் என ஊராட்சிமன்ற தலைவர் தரப்பில் புகார்‌தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராணி மற்றும் அவரது கணவர் மகுடீஸ்வரன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊராட்சி மன்றத்தலைவரை செயல்படாமல் முடக்கிவைக்கப் படுவதாகக் கூறி பாஜக சார்பில் தொப்பம்பட்டி ஊர்ட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான பாஜகவினர்‌ ஆர்ப்பாட்த்தில் கலந்துகொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்த வராமல் நீண்டநேரம் காத்திருந்தனர்.கடும் வெயிலில் காத்திருந்த பாஜகவினர் கோபமடைந்து, போலீசார் போட்டிருந்த தடுப்பு வேலிகளை தாண்டியும், சுவர் ஏறிக்குதித்தும் அத்துமீறி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பாஜகவினரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிந்து மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல்  கிழக்கு மாவட்ட முன்னால் தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் ஆறுமுகம், செல்லத்துரை, சதீஷ்குமார், லோகநாதன், மணிவேல்  உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்  மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் ,இளைஞரணி தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர்‌ ஆனந்த், நகர பொதுசெயலாளர் ஆனந்தகுமார், புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, அவரது கணவர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்ய இருப்பதை அறிந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமறைவாகினர்‌. தலைமறைவான அனைவரையும் கைது செய்ய கீரனூர் போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் பழனி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!