அதிமுக பொதுக்குழு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் பாதியிலேயே கலைந்துள்ளது.. பொதுக்குழுவிற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆவேசமாகப் பேசியதோடு, ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக குரல் எழுப்பினர். இதையடுத்து, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
பொதுக்குழுவில், 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார். தொடர்ந்து கே.பி.முனுசாமியும் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகவும், அவர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமைதான் என்றும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும், இரட்டைத் தலைமையை ரத்து செய்து ஒரே தலைமையின்கீழ் கொண்டு வருவது பற்றி இங்கு விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியையும் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் கோரி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சி.வி.சண்முகம் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார்..அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரையாற்றுகையில், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்தார்.
மீண்டும் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மேடையில் இருந்து எழுந்து, பொதுக்குழுவைப் புறக்கணித்துவிட்டுக் கிளம்பினர். பொதுக்குழு கூட்டத்தில் இருந்து மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்ஸை நோக்கி தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.