பழனியை அருகே ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து உறுப்பினர்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனியை அடுத்துள்ளது புஷ்பத்தூர் ஊராட்சி.இந்த ஊராட்சி மன்றத் தலைவியாக செல்வராணி என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராணி மற்றும் அவரது கணவர் மகுடீஸ்வரன் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவி செல்வராணியின் காசோலை அங்கீகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை மக்கள்பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் காசோலை அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் தூண்டுதலே காரணம் என்று குற்றம்சாட்டினர்.இதனைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் கடந்த செவ்வாய் கிழமை தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீசார் அமைத்த தடுப்புகளை தாண்டி அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வராணியை தகுதி நீக்கம் செய்யும் வகையில், பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் புஷ்பத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புஷ்பத்தூர் ஊராட்சியில் உள்ள 12 வார்டு கவுன்சிலர்களிடமும் ஊராட்சி தலைவி செல்வராணியின் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. உறுப்பினர்களின் கருத்துகளை பதிவு செய்து இதனை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையாக அனுப்பிவைக்கப் படும் என்றும், அறிக்கையை மையமாக வைத்து மாவட்ட ஆட்சியர் புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரின் தகுதி நீக்கம் குறித்து முடிவு செய்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கருத்துகேட்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதனால் புஷ்பத்தூர் ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.