அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வரும் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.
இதற்காக நாளை இரவு 7 மணி அளவில் ஆம்பூர் செல்ல உள்ளவர், நாளை மறுதினம் 11மணியளவில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
தொடர்ந்து, 12:30மணியளவில் விரிவுபடுத்தப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர், மாலை 4 மணி யளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் தொடர்ச்சியாக, வரும் 30ம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். பின்னர், சென்னைக்கு புறப்பட்டுச் வருகிறார். இந்த விழாக்களில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். முதல்வர் வருகையையொட்டி, மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.