சீமை கருவேல மரங்கள் வெட்ட புதிய ஏலம் நடத்த கோரிய வழக்கு

சிவகங்கை திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் நெடுமரம் கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது.

ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 26 ஏலம் எடுக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதே நபருக்கு ஆண்டு தோறும் ஏலத்தை நீடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏலம் விடாமல் பழைய நபருக்கே நீடிப்பது ஏல ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மேலும், சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு விடப்பட்ட ஏலத்தை 3.6.2022 அன்று மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு வெளிப்படையான ஏல நடைமுறைகளை பின்பற்றாமல் அரசியல் உள்நோக்கத்திற்காக ஏலத்தை நீட்டித்து வழங்குவது சட்டவிரோதம்.

எனவே, சமூக காடுகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நெடுமரம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வெட்டுவதற்கான 2018-ல் விடப்பட்ட ஏலத்தை நீடிக்காமல் புதிய ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி, நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து சென்னை முதன்மை வன பாதுகாவலர், சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Translate »
error: Content is protected !!