அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் உதயக்குமார் எம்எல்ஏ அளித்த பேட்டி: அதிமுகவின் ஒற்றை தலைமை கோரிக்கையை ஏற்று ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பாக 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்தனர்.
அதிமுக பொதுக்குழுவும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே எந்த ஒளிவு மறைவின்றி நாடே பார்க்கும் அளவுக்கு நடைபெற்றது. ஆனால் அது செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு குறித்த தீர்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.
வரும் செப். 3ம் தேதி கேரளாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது காவிரி, பெரியாறு அணை பிரச்னைகள் குறித்து முதல்வர் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.