தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தலைப்பில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாடு திருமுருகன்பூண்டி பாப்பிஸ் விஸ்டா ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் தொடங்கிவைத்தல், பிணையில்லா கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் தொடங்கி வைத்தல், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளத்தினை தொடங்கிவைத்தல், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் தொடங்கிவைத்தல், குறிச்சி தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய் வரவேற்று பேசுகிறார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் சிறப்புரையாற்றுகிறார்.