கடந்த ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது மோசமான வானிலையின் காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக பயணத்தை மேற்கொண்டார்.
அவர் பயணம் மேற்கொண்ட வழியில் சில போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது வாகனத்திலேயே 20 நிமிடங்கள் வரை காத்திருக்க நேரிட்டது இது கடுமையான பாதுகாப்பு குறைபாடு என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பஞ்சாப் அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த அறிக்கையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் திடீரென பயணத்திட்டம் மாற்றப்பட்டதால் தான் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் பஞ்சாபி அரசியல் ரீதியாக சிக்கவைக்க குற்றச்சாட்டுகள் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் பொழுது மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசின் மீது பாதுகாப்பு குறைபாடுகளுக்கு முழுக்க முழுக்க காரணம் பஞ்சாப் காவல்துறையினர் என குற்றம் சாட்டியது. இரண்டு தரப்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொள்வதை தங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் இது பிரதமரின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரம் எனவே இந்த விஷயத்தில் விசாரணை குழு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்த தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான விவகாரம் விசாரிக்கப்படும் என அறிவித்தனர்.
மேலும் இந்த குழுவின் தேசிய புலனாய்வு அமைப்பின் டி ஜி அல்லது அவரால் நியமிக்கப் படக்கூடிய ஐஜி பதவிக்கு கீழ் இல்லாத ஒரு அதிகாரி இடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை தவிர யூனியன் பிரதேசமான சண்டிகர் மாநிலத்தின் டிஜிபி பஞ்சாப் மாநிலத்தின் ஏடிஜிபி மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரதமரின் பயண திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ள பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் உடனடியாக அனைத்து விவரங்களையும் ஆவணங்களையும் ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா விடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி இந்து மல்ஹோத்ரா அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இந்தக் குழு பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு யார் யாரெல்லாம் காரணமானவர்கள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய முக்கியஸ்தர்களான பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாத வண்ணம் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான இந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமான விசாரணைகளை அப்படியே விட்டுவிட முடியாது என்றும் இதனால் மத்திய அரசு அல்லது மாநில அரசு ஏதாவது விசாரணைகளை மேற்கொண்டு இருந்தால் அவை அனைத்தையும் செயல்பட தடை விதிப்பதாகவும் உத்தரவில் தெரிவித்தனர்.