அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வரும் நிலையில் அதனை சரிசெய்ய நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் அங்குள்ள உற்பத்தி பிரிவு பொதுமேலாளர் பொறுப்பின்றி நீண்டகால விடுமுறையில் சென்றிருப்பதாக தகவல்.
பால் பண்ணையில் உற்பத்தியை கண்காணிக்க வேண்டிய பொது மேலாளர் பணியில் இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து முடித்து அதிகாலை 2.00மணிக்குள் பால் பண்ணையை விட்டு வெளியேறி விநியோகத்திற்கு செல்ல வேண்டிய விநியோக வாகனங்கள் இன்று காலை 7.30மணிக்கு மேல் தான் புறப்பட்டுள்ளன. இதனால் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கான பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் தினசரி தொடர்கதையாக இருக்கும் இந்த பிரச்சினையை அரசு மற்றும் ஆவின் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட அதற்கு இதுவரை நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல் பால்வளத்துறை அமைச்சரின் ஆசியோடு ஆவின் நிர்வாகம் மெத்தனப்போக்கோடு நடந்து கொண்டு வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் இதே நிலை தொடருமானால் நுகர்வோராகிய பொதுமக்கள் தனியார் பால் பக்கம் திரும்புகின்ற சூழல் உருவாகும். ஒருவேளை ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறை அமைச்சரும் அதைத் தான் விரும்புகிறார்களோ என்கிற சந்தேகம் அழுத்தமாக எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.