உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ள, 1,800 கோடி ரூபாயை விரைந்து வசூலிக்குமாறும், பயன்படுத்தாமல் உள்ள மின் இணைப்புகளை, போர்க்கால அடிப்படையில் அகற்றுமாறும், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 தினங்களுக்குள், மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்; இல்லையேல் மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராத தொகையுடன் மின் கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படும்.
தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு, மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்களுக்கு தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் போன்ற சேவை பணிகளில் ஈடுபடுகின்றன.
இதனால், அவற்றுக்கு மட்டும் மின் பயன்பாடு கணக்கெடுத்ததில் இருந்து கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது.அப்படி இருந்தும் அவை ஒழுங்காக செலுத்துவதில்லை. ஏற்கனவே, மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில், உள்ளாட்சி அமைப்புகள் ஜூலை நிலவரப்படி மின் கட்டணம் செலுத்தாமல், 1,800 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன.
இதனால், மின் வாரியத்திற்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளிடம் பேசி, மின் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தர விட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில், குறிப்பாக ஊராட்சிகளில் பல மின் இணைப்புகள் பயன்படுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கான பட்டியல், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.எனவே, ஊராட்சி தலைவர்களின் அனுமதியுடன், பயன்படுத்தாமல் உள்ள மின் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி, கணக்குகளை முடிக்குமாறும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.