நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை, அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் உள்ள கிராமத்தில் நீர்நிலைகளை ஒட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு விளக்கம் அளிக்க அவகாசம் கேட்ட நிலையில், மனுதாரர் தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு நிறுவனங்களும் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். அதேபோல குடிநீர் ஆதரமாக மட்டுமின்றி சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதிலும் நீர்நிலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை ஆக்கிரமிப்பது தவறு என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்று கூறிய நீதிபதிகள், அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். இயற்கையை நாம் பாதுகாத்தால், அந்த இயற்கை நம்மை பாதுகாக்கும். இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி போன்ற பேரிடர்கள் மூலம் இயற்கை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தங்களது உத்தரவில் இருந்து தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.